கையெழுத்து -வெல்லத்தானே வேணும்!
இரவி பரமேஸ்வரி
'வெல்லத்தானே வேணும்' - இந்த வாக்கியம் நாயிடம் உண்ணி ஒட்டிக் கொண்டது போல என்னிடம் ஒட்டிக் கொண்டது. எப்போது இந்த வாக்கியத்தை யார் சொல்லக் கேட்டேன் என்று ஏதும் ஞாபகமில்லை. பொதுவில் எல்லா ஞாபகங்களும் என் தோளில் ஊர்ந்து கொண்டிருக்கின்றன. என் பொக்கற்றுக்குள் ஞாபகங்களை நிரப்பி வைத்திருக்கிறேன். ஆனால், 'வெல்லத்தானே வேணும்?' யார் சொன்னார்? எப்போது சொன்னார்?
சோளகம் குபுகுபுவெனப் பாய்கிற நேரத்தில் அளவெட்டி தேரிட்டி பொன்னிப்புலக் கிறவுண்டில் தாச்சி விளையாடுவார்கள். அப்படிப் போட்டிக்கு எங்கும் விளையாடப் போவார்கள். அல்லது யாராவது விளையாட வருவார்கள். ஏழாலை ரீம் வந்தது. வசாவிளான் ரீம் வந்தது. தொல்புரம் ரீம் வந்தது. எவரும் வென்றதாக இல்லை. அந்த நாட்களில் முருகண்ணையின்ரை மோன் சந்திரன் சொன்னானோ? 'வெல்லத்தானே வேணும்'
வாடைக்காற்று குளிரெடுக்கத் தொடங்குகிற காலத்தில் எங்கள் மகாஜனாக் கல்லூரி ரீம் உதைபந்தாட்டத்தில் யாழ்ப்பாணத்தை ஒரு கலக்குக் கலக்கும். மகாஜனாவின் முதலாம் பிரிவு எவரிடமும் தோற்றதாக இல்லை. எல்லா 'மட்ச்'சுகளையும் (Match) பஞ்சண்ணை தனது கள்ளுக் கொட்டிலைப் பூட்டிவிட்டுப் பார்க்கப் போவார். அவர் தான் சொன்னாரோ? 'வெல்லத்தானே வேணும்?'
1980களுக்குப் பிறகு நாங்கள் தோற்ற கதை குறைந்து வென்ற வரலாறுகள் எங்களிடம் இருந்தன. அதனால்தான் நெஞ்சில் அது கனத்தபடி இருந்தது. 'வெல்லத்தானே வேணும்'
நாயிலிருந்து இரத்தத்தை உறிஞ்சிக் குடித்து பொருமிப் பெருத்த உண்ணி, நாயை விட்டு கொட்டுண்டு விலகிவிடும். இப்படி என்னிடமிருந்தும் ஒரு நாள் கொட்டுண்டு வீழ்ந்தது. அது 2009ஆம் ஆண்டு மே 18ஆம் நாள் அல்லது அதற்குப் பிந்திய நாட்களில். கடும் கோடையாக வெய்யில் வீசிய அந்த நாட்களில் நான் புழுபோலத் துடித்தேன். வெய்யிலினால் அல்ல. வேறெதனால் என்பது எல்லோரும் அறிந்ததே. அந்த நாட்களில் நான் அடைந்த துக்கத்தைப் போல வெறெந்த நாட்களிலும் அனுபவித்ததில்லை. அப்பா, அம்மா இறந்த போது கூட.
அன்றைக்குப் பிறகுதான் என்னிடம் இன்னொரு வார்த்தை ஒட்டிக்கொண்டது. 'தோற்கத்தான் போகிறோமா?' வார்த்தையே கேள்வியாகி என்னை வதைத்தது. அதை இப்படித்தான் சொல்லியிருக்க வேணும். 'தோற்கத்தான் போகிறோம்'
ஒருகணம் உணர்ந்து பாருங்கள். 'வெற்றி' என்ற ஒரு சொல் ஈழத்தமிழரிடம் இனி இல்லை. எந்தத் தமிழரிடமும் இல்லை என்று அடித்துச் சொல்வேன். அதன் துக்கத்தை உணரமுடிகிறதா? சிறகுகள் வெட்டப்பட்ட ஒரு புறா பறக்க முடியாமல், ஓட முடியாமல், திக்குத் திசை தெரியாது அசைவுற்று ஊர்கிறது. அப்படித்தான் என் தமிழினத்தை நான் உணர்கிறேன்.
நாம் விடுதலைக் கொத்தளத்திலிருந்து வெளியேற்றப்பட்டோம். சுதந்திர மூச்சு என்று எமக்கு எதுவும் இல்லை. நெருப்புத்தணலுள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறோம். தோற்றவர் மீது வாழ்வின் துவளலை முதுகில் ஏற்றி மூச்சிரைக்க வைக்கிறது. இதில் சொல்லும் எதுவும் வெறும் பேனாவின் எழுத்து அல்ல.
அப்போது எமக்கு ஒருபோதும் அப்படி இருக்கவில்லை. வேலிகளும், குடிசை வீடுகளும் எரிக்கப்பட்ட சாம்பல் புழுதியை சோளகம் மூச்சில் வந்து ஏற்றியது. கும்பலாய் குருதிப் பொழிவை றோட்டோரத்தில் உள்ள புல்லின் தடுக்கலில் கண்டோம். இழவு வீடுகளும், ஒப்பாரி ஓலங்களும் காற்றில் புகையாக மேலெழுந்தன. யாவற்றிற்கும் சாட்சியங்களாக எமதிரு கண்களே இருந்தன. ஆனால் வேறொன்றை இதில் சொல்ல வேண்டும். அப்பொழுது எதிலும் வென்றோம். அது ஒன்றையே இதில் பதிகிறேன்.
1982இல் பல்கலைக்கழக அனுமதி. படிப்பதற்கு அங்கு யார் போனார்கள்? பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு (தும்பறை) எனக்கு அனுமதி இருந்த போதும், அரசியல் வேலைகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்தான் சரி என்றார் தோழர் விசு. தமிழ்ச் சமூகத்துடன் ஒன்றிய பல்கலைக்கழகம் அப்பொழுது அது ஒன்றுதான்.
1982 யூலை 16ஆம் நாள் அதிகாலை எழுந்து 'ஷாம்பு' (Shampoo) போட்டுத் தோய்ந்து, வெள்ளைக் கொலர் வைத்த நீல சேர்ட்டும், கறுப்பு லோங்சும் அணிந்து 'அம்மா போட்டு வாறன், அப்பா போட்டு வாறன்' என்று சொல்லிப் புறப்பட்டன். சைக்கிள் ஏறி நான்கு நிமிடத்தில் அம்மாள் கோயில் வந்தது. அம்மாளில் அன்பு இருக்கிறது. ஆனால், கடவுளில் நம்பிக்கை இல்லை. இதை எப்படிச் சொல்லிப் புரிய வைக்க? அம்மாளை யோசிக்கப் பாவமாக இருந்தது. ஆனால் நெஞ்சால் கூட கும்பிடாமல் மனதை இறுக்கிப் போனேன். அது தெல்லிப்பளைச் சந்திக்கு. சந்திரன் வீட்டில் சைக்கிளை விட்டு விட்டு பஸ் ஏறினேன். 769 பஸ்ஸை விட்டு நாச்சிமார் கோயிலடியில் இறங்கி கிழக்குப் பக்கமாக அரை மைல் நடக்கையில் அப்போது வந்தது பல்கலைக்கழகம். மீண்டும் சொல்கிறேன் அது படிப்பதற்காக புகுந்த இடமல்ல.
அரசியல் ரேகைகள் சந்திக்கிற அல்லது அரசியல் நரம்புகள் ஒன்று கூடுகிற மையம் யாழ் பல்கலைக்கழகம். அனைத்து இயக்கங்களின் தொடர்புகளும் அங்கு இருந்தன. 1982ஆம் ஆண்டு மே மாதத்தில் இரண்டாம் நாளாக இருக்க வேண்டும். அப்போது பல்கலைக்கழகத்தில் நான் புகவில்லை. அன்று ஓர் அவசரத் தேவை கருதிப் புகுந்தேன்.
அன்று மிக அதிகாலையில் காங்கேசன்துறை சீமேந்துத் தொழிற்சாலையில் துண்டுப்பிரசுரம் வினியோகிப்பதற்காகத் தோழர்களுடன் சென்றிருந்தேன். எனக்கு வினியோகிக்கப்பட வேண்டிய பொறுப்புத் தந்த இடம் காங்கேசன்துறை - கீரிமலை வீதியிலுள்ள சீமெந்துத் தொழிற்சாலையின் வாசலில் ஆகும். துண்டுப்பிரசுரம் சொன்ன செய்தி 'தமிழர் நிலத்தில் வளங்கள் சுரண்டப்பட்டு, சீமேந்தாக சிங்கள தேசத்திற்கு அனுப்பப்படுகின்றது. ஜெயமானே என்கிற சிங்களவன் ஒருவனே சீமேந்து ஆலையின் பொறுப்பாளராக இருந்து இந்த வேலையைச் செய்கிறான். இது குறித்த உரத்த சிந்தனையை அங்கு பணிபுரியும் தமிழ்த் தொழிலாளர்களுக்கு அவசியம் தேவை.'
ஏழு மணிக்கு பணி தொடங்குவதற்கு முன்னதாக காலை ஆறு மணியிலிருந்து துண்டுப்பிரசுரம் வினியோகித்தோம். ஏழு மணிக்கு வினியோகத்தை நிறைவு செய்து அளவெட்டி நோக்கி சைக்கிள் உழக்கினேன். இலகடி ஒழுங்கையில் வருகிற போது நவரத்தினமண்ணை என் சைக்கிளை மறித்துச் சொன்னார். 'பெருமாக்கடவை வயல்வெளிக்கை உமாவையும், இறைவனையும் சுட்டுப் போட்டிருக்கு.'
என்னால் நம்பமுடியவில்லை. விடிய ஐந்து மணிக்கு எழும்பி துண்டுப்பிரசுரம் வினியோகிக்கப் போக வேண்டும். எனவே 'வேறொரு' வீட்டில் (அரசியல் வேலைகளுக்காக அந்த வீட்டை வாடகைக்கு வைத்திருந்தோம்) இரவு பத்தரை மணிக்கே படுக்கப் போனேன். பதினொரு மணியளவில் இறைவனண்ணை வந்து கதவைத் தட்டினார். தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கிற ஒருவருக்காக 'திருவிழா' நாடகத்தை மகாஜனா சபை வாசிகசாலையில் போட வேண்டும் என்று கேட்டார். ஓம் என்று சொல்ல எந்தச் சிரமமுமில்லை.
உமாண்ணையுடனும் அரசியல் விவாதங்கள் புரிந்த நாட்கள் அவை. உமாண்ணையும் (உமைகுமாரன்) இறைவனண்ணையும் (இறைகுமாரன்) பெருமாக் கடவை வயல் வெளிக்குள் வீழ்ந்து கிடக்கிறார்களாம். என் கால்கள் பதறத் தொடங்கின். பெடல்கள் கால்களுக்குள் சுருண்டு கிடக்கின்றன. உன்னி உழக்க கால்களுக்கு ஒரு சக்தி தானும் இல்லை. ஆயினும் சைக்கிள் என் வீடு நோக்கித் திரும்பவில்லை.
கும்பழாவளைப் பிள்ளையார் கோயில் கொடியேற்றம் அன்று. கோயில் வீதியை செப்பனிடுகிற பணியில் தொண்டர் சபையில் உள்ள மகேன் நிற்கிறான். அவன் தொனி வடக்கு அளவெட்டியாரைக் குற்றம் சாட்டுகிற மாதிரி இருக்கிறது. அவன் குற்றச்சாட்டைப் புறங்கையால் தவிர்த்து, பெருமாக்கடவை வயல் வெளிக்குப் போனேன்.
எனக்கு அந்தச் சூழலை விபரிக்க எந்தச் சொற்களும் வேண்டாம். வார்த்தைகளும் தேவையில்லை. தாடி, மீசையுடன் இருந்த இறைவனண்ணை கைகளை அகல விரித்து வானைப் பார்த்து கேள்வி கேட்டார். உமாண்ணை மண்டை பிளந்தபடி கைவிரித்து மண்ணைக் கவ்விக் குரல் வைத்தார். இருவரது வாக்கியங்களும் ஒன்று தாம். 'என்ன செய்தோம் நாம்? இந்த மண்ணுக்காக எங்கள் தமிழ் மக்களுக்காக எங்களை ஒறுத்து சில பணி புரிந்தோம். அதற்கான தண்டனையா இது?'
அந்த ஆண்டின் (1982) ஜனவரி இரண்டாம் நாள் யாழ்ப்பாணம் சித்ரா அச்சகத்தில் வைத்து சுந்தரம் சுடப்பட்டு மேசையில் தலைகுத்திக் கிடந்து அதே கேள்வியையே கேட்டார்: '.................தண்டனையா இது?'
அதன் போதும் மத்தியான வெய்யிலில் மூச்சிரைக்க தொல்புரம் தாண்டி சுழிபுரம் ஒழுங்கையில் சுந்தரம் வீட்டுத் தலைவாசல் ஏறினோம். வேப்பமரம் முற்றத்தில் இருந்த கொட்டில் வீடு அது. பக்கத்தில் பண்ணாகத்தில் இருந்தது எங்களை எல்லாம் உசுப்பேற்றிய அமிர்தலிங்கத்தின் வீடு. அது மாளிகை போன்ற வீடு. அவர் மகன் மருத்துவம் பயில்கிறார்.
அளவெட்டியில் உமாண்ணை, இறைவனண்ணையின் படுகொலை, அடுத்து எம் பணி என்ன? இது குறித்து விவாதிக்க தோழர் விசுவைச் சந்திக்க வேண்டும். உடனடித் தொடர்புக்கு என்ன வழி, வசதி இருக்கிறது? ஒரு நம்பிக்கை யாழ் பல்கலைக்கழகம்.
வெக்கையையும், வேர்த்து ஊத்துவதையும் தாங்க என்னிடம் ஒரு சேர்ட் இருக்கிறது. மெல்லிய மஞ்சள் நிறமான கண்ணறை போன்ற சேர்ட் அது. சைக்கிளில் அவசரப் பயணத்திற்கான சேர்ட். அதனோடு பல்கலைக்கழகம் புகுந்தேன். கன்ரீனில் கால் வைத்தேன். தோழர் விசு இருக்கிறார். 'பிளேன்ரீ குடியேனப்பா' என்றார் தோழர் விசு. 'உங்களோடை கொஞ்சம் கதைக்க வேணும்' தோழர் விசுவிடம் சொன்னேன்.
அது மேமாதமெனில் யூலை 16இல் சட்டபூர்வமாக பல்கலைக்கழகத்தில் நுழைகிறேன். அன்றிலிருந்து என்றில்லையென்றாலும், அதன் பிறகிலிருந்து அரசியல் வேலைக்கான களம் அது. அக்களத்தில் எப்போதும் வென்றோமல்லோம். தோல்விகள் தான் அதிகம் வந்தன. இழப்புக்கள், பிரிவுகள், துக்கங்கள், துரோகங்கள் என்று நிறையவே வந்தன. ஒரு கயிறு அவிழ்க்கப்படுகிறதென்றால் அல்லது அறுபடுகிறதென்றால் நூறு கயிறுகள் மேலும் பிணைபடுகின்றன. ஆயினும் தோற்றுச் சரிந்தோம் என்பது தொடர்ந்ததில்லை.
இப்பொழுது அது நிகழ்ந்திருக்கின்றது. முற்று முழுதாகவே தோற்றுச் சரிந்தோம். முகம் குப்புற வீழ்ந்து போனோம். இனி எங்கனம் எழுதல் சாத்தியம்? என்ற கேள்வி எல்லோர் மீதும் கவிழ்ந்திருக்கிறது. புகை பரவினாற் போல படிந்திருக்கிறது.
அந்த இருட்டிலிருந்து எழுந்த சில வெளிச்சம்தான் நாடு கடந்த அரசாங்கம். அதற்கும் ஆயிரம் முட்டுக்கட்டைகள். அதனையும் தாண்டி மே 2 தேர்தலில் அதற்கு ஓர் உயிர் கிடைத்தது. மே 17இல் நாடு கடந்த அரசாங்கம் கூடியபோது தமிழர்களுக்கு ஓர் உயிர்ப்பு வந்தது. பேர்லினில் இருந்து கெங்காக்கா சொன்னா 'தம்பி இரவி தமிழீழம் கிடைக்குமடா. இருந்து பார்.'
நான் எனக்குள் சொன்னேன். 'வெல்லத்தானே வேணும்' இப்பொழுது மீண்டும் அந்த வாக்கியம் ஒட்டிக்கொண்டது. உண்ணியாக அல்ல. உறுதியாக!